Showing posts with label ஆனந்த். Show all posts
Showing posts with label ஆனந்த். Show all posts

Monday, April 20, 2009

540. ஒரு விபத்து ஒரு மரணம் ஒரு பேரிழப்பு

இது குறித்து எழுத வேண்டுமா என்று பலமுறை யோசித்துத் தான், இதை எழுதுகிறேன்! காரணம் உள்ளது. பின்னால் சொல்கிறேன்.

"சென்னை ஏப்ரல் 17: நேற்று இரவு 11 மணியளவில் தி.நகரில்,ஒரு சாலை விபத்தில், ஐடி கம்பெனி ஒன்றில் பணி புரிந்து வந்த 27 வயது வாலிபர் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்" -- இது போல தினம் 4 அல்லது 5 மரணச்செய்திகளை நாளிதழ்களில் வாசிக்கிறோம். செய்திகளை கடந்து விடுகிறோம், மறந்து விடுகிறோம். வாழ்க்கையின் ஓட்டம் அப்படியானது..

ஆனால், மேற்கூறிய செய்திக்கும் எனக்கும் சம்பந்தம் உள்ளது. (அந்த துக்கச்செய்தி என்னைத் தான் முதலில் வந்தடைந்தது. அடுத்த 15 நிமிடங்கள் தான் நான் வாழ்வில் அனுபவித்த மிக மிக மோசமான தருணங்கள்!) அந்த விபத்தில் இறந்த வாலிபர், 27 வயதான என் மருமகன் (அக்கா மகன்); தி.நகரில் கட்டப்பட்டுள்ள புதுப் பாலத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலைப் பக்கம் (பைக்கில் பயணித்து) இறங்கும்போது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக மீடியனைத் தட்டி, வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டு, பின்னந்தலையில் அடிபட்டு, ஸ்பாட்டிலேயே இறந்து போனான்.

எனக்குப் பிறந்தது இரண்டுமே பெண்கள் என்பதால், நானும் என் மனைவியும் அவனை மகன் போலவே பாவித்தோம். அவனும் மகன் போல் தான் நடந்து கொண்டான். மிக நல்லவன். சூதுவாது அறியாதவன், அதிர்ந்து பேசமாட்டான். கடும் உழைப்பாளி.

"எதற்குப் பிறந்தான்? எதற்குப் படித்தான்? ஏன் இத்தனை நல்லவனாக இருந்தான்? எதற்கு பிரதிபலன் எதிர்பாராமல் எல்லார்க்கும் ஓடியோடி உதவி செய்தான்? அவனைக் காப்பாற்ற ஒரு வாய்ப்பு எங்களுக்கு வழங்காமல் (முக்கியமாக அவனிடம் சதாசர்வ காலமும் உதவி பெற்றுக் கொண்ட எனக்கு, அவனுக்கு உதவ ஒரு வாய்ப்பு தராமலேயே!) ஒரு கணத்தில் உயிரை விட்டு, எதற்காக ரோடு ஓரத்தில் ஒரு முக்கால் மணி நேரம் அனாதையாகக் கிடந்தான்?" - இப்படி எத்தனையோ மனதை அரிக்கும் கேள்விகள், எதற்கும் பதில் கிடையாது :-(

சிறு வயதிலிருந்தே, பல பொழுதுகளை எங்கள் வீட்டில் கழித்தவன் அவன். "ஆனந்தா இதைப் பண்ணு, ஆனந்தா அதைப் பண்ணு, ஆனந்தா அதை வாங்கிட்டு வந்தியா, ஆனந்தா அதைக் கொடுத்தாச்சா" என்று இனிமேல் ஆனந்தநாம சங்கீர்த்தனம் பண்ண முடியாது! அவன் செத்துப் போனது என் ஸிஸ்டத்தில் இன்னும் சரியாக பதிவாகவில்லை. "மாமா" என்று கூப்பிட்டவாறே, எப்போதும் போல் ஒரு சனிக்கிழமை மதியம் ஆபிசிலிருந்து என் முன் வந்து நிற்பான் என்ற பிரமை என்னை சூழ்ந்திருக்கிறது!

அகாலத்தில் ஒருவர் இறப்பது என்பது அவருக்கான தண்டனையே அல்ல. அந்த தண்டனை அவரைச் சார்ந்தவர்களுக்கானது. எண்ணி எண்ணி மருகும்படியான துக்கம் அது, சில சோகங்கள் வாழ்வின் எல்லை வரை நம்மை விடாது துரத்தும் :-( நிச்சயம் அது போன்ற ஒன்று தான் இது, என்னளவில். இப்படிச் சொல்ல காரணம் இருக்கிறது. ஆனந்த் எனக்காகச் செய்த காரியங்கள் எல்லாவற்றையும் என்னாலேயே செய்து விட முடியும் என்றாலும், அந்தச் செயல்களை நானே செய்யும் சமயங்களில், அவன் ஞாபகம் வருவதை இனி தவிர்க்கவே முடியாது...

2 வருடங்களே பணி புரிந்த கம்பெனியிலிருந்து இறுதி மரியாதை செலுத்த 500 பேர் வந்திருந்தது பார்த்து பெருஞ்சோகத்திலும், பிரமிப்பு ஏற்பட்டது. இன்னும் எத்தனையோ நண்பர்கள் சாவுக்கு...

மிக நல்லவனாக இருந்தால், கடவுள் சீக்கிரம் அழைத்துக் கொண்டு விடுவான் போல் இருக்கிறது! என் வலது கை போல் இருந்தவன், பெருமாள் அந்தக் கையை உடைத்துப் போட்டு விட்டார்!

இந்தப் பதிவுக்கான காரணம்: ஆனந்த் விபத்து நிகழ்ந்தபோது, ஹெல்மட் அணிந்திருந்தான். ஆனால், ஹெல்மட் ஸ்ட்ராப்பின் (strap) பக்கிளை (buckle) போடாததால், ஹெல்மட் கழண்டு விட்டதாக விபத்தை நேரில் பார்த்த ஒரு கடைக்காரர் கூறினார்.

ஆகவே, பைக்கில் செல்பவர் ஹெல்மட் போட்டால் மட்டும் போதாது. ஹெல்மட் strap buckle ஐயும் சரியாக போட்டுக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இவ்விடுகையை வாசிக்கும் (டூ வீலரில் பயணிக்கும்) நண்பர்களுக்கு இதை ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.

நேற்று அயன் திரைப்படம் பார்க்க எனக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணியிருந்தான்! இனி அயன் படம் எப்போதும் பார்க்க முடியாது செய்து விட்டான் :-(

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails